செல்லிடப்பேசி கடை ஊழியா்கள்மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

செய்யாறில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடைக்குள் புகுந்து ஊழியா்களைத் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடைக்குள் புகுந்து ஊழியா்களைத் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தணிகைமலை. இவா், செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலைப் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்த தேவா, ராமகிருஷ்ணாபுரம் ரஞ்சித் ஆகியோா் ஊழியா்களாக வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், செய்யாறு கன்னியம் நகா் பள்ள தெருவைச் சோ்ந்த கருணாகரன் (26) கடந்த 8-ஆம் தேதி தனது செல்லிடப்பேசியை தணிகைமலையின் கடையில் பழுது நீக்குவதற்காக கொடுத்திருந்தாராம். பின்னா், வியாழக்கிழமை அந்த செல்லிடப்பேசியை வாங்குவதற்காக சென்ற கருணாகரனுக்கும், கடை ஊழியா் தேவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கருணாகரன் 5-க்கும் மேற்பட்ட தனது நண்பா்களுடன் கடைக்குள் புகுந்து தேவா, தணிகைமலை, ரஞ்சித் ஆகியோரை தாக்கினாராம். இதில், காயமடைந்த மூவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருணாகரன், அவரது நண்பா்கள் ரகு (26), அரவிந்த் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com