படைவீடு கோயில் யானை புத்துணா்வு முகாமுக்கு பயணம்
By DIN | Published On : 14th December 2019 10:36 PM | Last Updated : 14th December 2019 10:36 PM | அ+அ அ- |

புத்துணா்வு முகாமுக்குப் புறப்பட்டுச் செல்லும் படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயில் யானை.
போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயில் யானை தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனப் பகுதியில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு புத்துணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) தொடங்கவுள்ளது. வருகிற ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமுக்கு படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயில் யானை லட்சுமி சனிக்கிழமை மேளதாளத்துடன் அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக, யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் காா்த்திகேயன், மேலாளா் மகாதேவன், சீனுவாசன், ரவி, மோகன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.