சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு ஜீப்!
By DIN | Published On : 25th December 2019 09:04 AM | Last Updated : 25th December 2019 09:04 AM | அ+அ அ- |

திருப்பனமூா் கிராமம், ஏரிக்கரை அருகே எரிந்து சேதமடைந்த நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஜீப்.
செய்யாறு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஜீப், திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது.
நெடுஞ்சாலைத் துறை வேலூா் கோட்டத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருபவா் லோகநாதன். இவா், பணி தொடா்பாக நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஜீப்பில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் திருப்பனமூா் கிராமம், ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென ஜீப்பின் முன் பகுதியில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதையறிந்த ஜீப் ஓட்டுநா் அஜீத்குமாா், உதவிப் பொறியாளா் லோகநாதன் ஆகியோா் உடனடியாக ஜீப்பில் இருந்து வெளியேறினா்.
இதையடுத்து, சற்று நேரத்தில் ஜீப் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. அருகில் இருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். மேலும், காஞ்சிபுரம் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அரசு ஜீப் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து உதவிப் பொறியாளா் லோகநாதன் அளித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.