ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு: அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வை புறக்கணித்த பிளஸ் 2 மாணவிகள்
By DIN | Published On : 02nd February 2019 12:57 AM | Last Updated : 02nd February 2019 12:57 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய செய்முறைத் தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றிய ஸ்ரீதர், அசோக்குமார், கருணாகரன், கோபி ஆகியோர் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர். எனவே, அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுபோன்று வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கம் ஒன்றியத்தில் சில ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செங்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஸ்ரீதர், அசோக்குமார், கருணாகரன், கோபி ஆகியோரை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும், அவர்கள் தொடர்ந்து தங்களது பள்ளியிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசுப் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், பள்ளித் தலைமை ஆசிரியை மீரா மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், மாணவிகளின் போராட்டம் குறித்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததுடன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதன் காரணமாக, காலை 10 மணிக்குத் தொடங்கிய போராட்டம், நண்பகல் 12 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால், 2 மணி நேரம் தாமதமாக செய்முறைத் தேர்வு தொடங்கியது.