சேத்துப்பட்டில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்திருந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்தச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்திருந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. 
ஆத்திரை, உலகம்பட்டு, கொலக்கரவாடி உள்பட 12 கிராமங்களைச் சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், 27 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்: இதனிடையே, எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில், 5 பெண்கள் உள்பட 27 பேர் சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இருந்து போளூர் சாலை வழியாக கருப்புக்கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். 
அப்போது, அலுவலகத்தில் இருந்த எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் வழக்குரைஞர் அபிராமன் தலைமையில் அங்கு கூடியிருந்தவர்களும், அருள் தலைமையில் வந்தவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஆஜராக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதால், மற்றவர்கள் அலுவலகம் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
செய்யாறு கலால் டிஎஸ்பி அசோக்குமார், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நரசிம்மன், உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
மாலை 5 மணி வரை ஆட்சேபனை மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com