பைக் மீது காரை மோதவிட்டு கோழி வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியத்துடன்,

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்த கோழி வியாபாரியைத் தாக்கி ரூ.75 ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (28). கோழி இறைச்சி மொத்த வியாபாரி. இவர், ஜமுனாமரத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோழி இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விநியோகம் செய்துவிட்டு, பணம் வசூலித்துச் செல்வது வழக்கம்.
அதன்படி, திருப்பத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் வந்த மணி, கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து தனக்குச் சேர வேண்டிய பணத்தை வசூல் செய்துகொண்டு மாலையில் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். ஜமுனாமரத்தூரில் இருந்து சிறிது தொலைவு சென்றதும் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாபாய் (24), மணியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்ல உதவி (லிப்ட்) கேட்டாராம். 
அப்போது, தனக்கு பைக் ஓட்டியதால் களைப்பதாக உள்ளது என்றும், நீயே பைக்கை ஓட்டு என்றும் கூறி, ராஜாபாயிடம் மணி 
பைக்கை கொடுத்தாராம். ராஜாபாய் பைக்கை ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் மணி அமர்ந்து சென்றார். சிறிது தொலைவு சென்றதும் அந்த வழியே வந்த கார், பைக் மீது மோதியது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற ராஜாபாய் பலத்த காயமடைந்தார். மணி லேசான காயமடைந்தார்.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், மணியைத் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.75 
ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
தீவிர வாகனத் தணிக்கை:  
 தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, ஜமுனாமரத்தூர் மலையில் இருந்து கீழே இங்கும் 4 சாலைகளிலும் தீவிர வாகன தணிக்கை செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.  மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தியும் போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தார். போலீஸார் தங்களைப் பிடிக்க முயல்வதைத் தெரிந்துகொண்ட மர்ம கும்பல், ஜமுனாமரத்தூர் - போளூர் சாலையில் தாங்கள் ஓட்டி வந்த காரை நிறுத்திவிட்டு, காட்டுக்குள் தப்பிச் சென்றது. இதையடுத்து, அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com