ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா
By DIN | Published On : 28th February 2019 09:37 AM | Last Updated : 28th February 2019 09:37 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் 18-ஆவது ஆண்டு ஆராதனை விழா மார்ச் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் நாளான சனிக்கிழமை (மார்ச் 2) காலை 6.30 மணி முதல் 10 மணி வரை ஹோமம், அதிஷ்டானத்தில் அபிஷேகம், அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சு.பாலகிருஷ்ணன், ஜோதி வெங்கடாச்சலம், பேராசிரியர் திண்ணப்பன், முருகக்குமரன், விசிறி சங்கர், ராஜூ ஆகியோர் பங்குபெறும் நூற்றாண்டு ஜயந்தி விழா ஒரு கண்ணோட்டம் நிகழ்ச்சியும், யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ஜயந்தி பாராட்டு விழாவும் நடைபெறுகின்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயிலை பா.சற்குருநாத ஓதுவார் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை எஸ்.ராஜாராம் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்: விழாவின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) காலை 6.30 மணி முதல் 11 மணி வரை மகன்யாசம், அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜையும், காலை 10.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ஹைதரபாத் சுஜாதா மூர்த்தி குழுவினரின் குச்சிப்புடி நடன நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கடலூர் ஸ்ரீகோபி பாகவதர் மற்றும் குழுவினரின் மஹா பக்த விஜயம் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் வெள்ளி ரத வீதியுலா, இரவு 8.30 மணிக்கு ஆரத்தி, கலைமாமணி ஆர்.பிச்சாண்டி குழுவினரின் மங்கள இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மார்ச் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தினமும் மாலை 6.15 மணிக்கு சிவானுபவம் என்ற தலைப்பில் நொச்சூர் ஸ்ரீவெங்கட்ராமன் பக்திச் சொற்பொழிவு நடத்துகிறார்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்து
வருகின்றனர்.