வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 05th January 2019 08:51 AM | Last Updated : 05th January 2019 08:51 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் 2 இடங்களில் அமைக்கப்படும் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலையில் 2 இடங்களில் வாக்குகளை எண்ண மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.