பெற்றோரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை: வீடு தேடிச் சென்று உத்தரவை வழங்கினார் ஆட்சியர்

செங்கம் அருகே பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலைக்கான உத்தரவை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.


செங்கம் அருகே பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலைக்கான உத்தரவை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், புதுப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு தமிழரசி (19), கலையரசி (17), தினேஷ் (15) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் தமிழரசி புதுப்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ஆம் ஆண்டும், கலையரசி ஆற்காடு அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தினேஷ் புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சாந்தி அண்மையில் உயிரிழந்தார். சாந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, தங்களது குடும்ப சூழ்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழரசி மனு அளித்தார்.
அதில், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், படிப்பைத் தொடரவும் உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, தமிழரசிக்கு வாரிசு அடிப்படையில் புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான ஆணையை அவரது இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு நேரில் சென்று வழங்கினார்.
மேலும், தமிழரசி படிக்கும் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தி, படிப்பை முடிக்குமாறு ஆட்சியர் தெரிவித்தார். இதேபோல, ஆற்காடு அரசுக் கல்லூரியில் படிக்கும் கலையரசி, திருவண்ணாமலை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தினந்தோறும் புதுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார். மேலும், அக்கா, தங்கை, தம்பி 3 பேரும் பிரியாமல் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுரை வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அப்போது, பயிற்சி ஆட்சியர் பிரதாப், தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com