அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருவூடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருவூடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் திருவூடல் திருவிழாவும் ஒன்று. கார்த்திகை தீபத் திருவிழா, சித்திரை பௌர்ணமி திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான பக்தர்கள் திருவூடல் திருவிழாவில் கலந்து கொள்வர். ஆண்டுதோறும் தை மாதம் 2-ஆம் தேதி இந்தத் திருவிழா நடைபெறும்.
ஸ்ரீஉண்ணாமுலையம்மன், 
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு இடையே நடைபெறும் ஊடல், கூடலை இந்தத் திருவிழா விளக்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி, நிகழாண்டுக்கான திருவூடல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
திட்டி வாசல் வழியாக தரிசனம்: அதிகாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உத்ஸவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசலில் நந்திக்கும், பின்னர் சூரிய பகவானுக்கும் காட்சியளித்தார்.
இதையடுத்து, ஸ்ரீஉண்ணாமுலையம்மன், சுந்தரமூர்த்தி நாயனாருடன் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மாட வீதிகளை 3 முறை வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று உத்ஸவர் சுவாமிகளை வழிபட்டனர்.
திருவூடல் நிகழ்ச்சி: மாலை 6 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சுவாமிகளுக்கு இடையே திருவூடல் தெருவில் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, திருமஞ்சன கோபுரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகுமரக் கோயிலுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் புறப்பட்டுச் சென்றார்.
இன்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் 
கிரிவலம்: புதன்கிழமை இரவு முழுவதும் குமரக் கோயிலில் தங்கிய ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வியாழக்கிழமை (ஜன.17) அதிகாலை 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வருகிறார்.
இதையடுத்து, வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சுவாமிகளுக்கு இடையே மறுவூடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com