சுடச்சுட

  

  இலவச மடிக் கணினி: மாணவர்கள் சாலை மறியல்

  By  வந்தவாசி/செங்கம்/ஆரணி  |   Published on : 02nd July 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, வந்தவாசி, செங்கம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் பள்ளி முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக் கணினி வழங்கப்படவில்லையாம்.
   ஆனால், அந்தப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு அண்மையில் மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டதாம். இதுகுறித்து தகவலறிந்த பள்ளியில் 2017-18-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள், தங்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்கவேண்டும் எனக் கோரி, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் விரைந்து வந்து சமரசம் செய்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தவாசியை அடுத்த தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி முன், அந்த பள்ளியில் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெள்ளாறு போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
   செங்கம்
   செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-18ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லையாம்.
   இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க மடிக்கணிகள் வந்துள்ளதாக முன்னாள் மாணவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அவர்கள் திரண்டு வந்து செங்கம்-போளூர் சாலை, சார்-பதிவாளர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தகவலறிந்த செங்கம் போலீஸார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
   அப்போது, கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, முன்னாள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
   மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   ஆரணி
   சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை.
   இந்த நிலையில், நிகழாண்டு பயிலும் மாணவர்களுக்கு வழங்க அரசு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
   இதனை வழங்க ஆரணியில் அமைச்சர் தொடக்கி வைத்தார். மேலும், சேத்துப்பட்டில் மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது.
   பள்ளிக்கு மடிக்கணினி வந்த செய்தியை அறிந்த முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் முறையிட்டனர்.
   இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, தலைமையாசிரியர் ராஜேந்திரன், வட்டாட்சியர் சுதாகர் ஆகியோர் முன்னாள் மாணவர்களிடம், மாவட்ட ஆட்சியர் மூன்று மாத காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
   அதன்படி, அனைவருக்கும் அரசு மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai