ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் சரித்திரம் படைக்கலாம்: பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
By DIN | Published On : 08th July 2019 01:29 AM | Last Updated : 08th July 2019 01:29 AM | அ+அ அ- |

ஒழுக்கத்துடன் கூடிய கல்வி சரித்திரம் படைக்கப் பயன்படும். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கூட பல சரித்திரங்களைப் படைக்கலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் க.பாண்டியன் பேசினார்.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார்.
சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் க.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்லூரியின் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளில் பட்டங்களைப் பெற்றவர்கள், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் என மொத்தம் 1,641 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது:
பட்டங்களைப் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோரை பாதுகாக்க தவறக் கூடாது. நேர்மை, ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வி சரித்திரம் படைக்கப் பயன்படும். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள்கூட பல சரித்திரங்களைப் படைக்கலாம். பல சாதனைகள் படைக்க அடித்தளமாக அமைவது ஒழுக்கத்துடன் கூடிய கல்விதான் என்றார்.
விழாவில், கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.