சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியில் தீ
By DIN | Published On : 08th July 2019 01:30 AM | Last Updated : 08th July 2019 01:30 AM | அ+அ அ- |

கலசப்பாக்கம் அருகே சனிக்கிழமை இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் மணிகண்டன் (30). லாரி ஓட்டுநரான இவர், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 520 சிமென்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம், சித்தூருக்கு திருவண்ணாமலை -போளூர் வழியாக வேலூர் நோக்கி சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை அருகே லாரி வந்தபோது மணிகண்டனுக்கு தூக்கம் வந்துள்ளது. இதனால் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவர் தூங்கினார். அப்போது, திடீரென நள்ளிரவு 12 மணிக்கு லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
இதனால், கண் விழித்துப் பார்த்த மணிகண்டன் உடனடியாக போளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.