கூட்டுறவுக் கடன் சங்கச் செயலர்களை பணியிட மாற்றம் செய்யும் முடிவைக் கைவிடக் கோரிக்கை
By DIN | Published On : 13th July 2019 10:29 AM | Last Updated : 13th July 2019 10:29 AM | அ+அ அ- |

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள செயலர்களை பொது பதவியில் வைத்து பணியிட மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜோதிமணி, செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் அர்ஜூனன், ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் பத்ராச்சலம், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள செயலர்களை பொது பதவியில் வைத்து பணியிட மாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஊதிய நிர்ணயம் செய்து, புதிய ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி அவர்களுக்குச் சேர வேண்டிய ஊழியர் வருங்கால வைப்பு நிதியை மத்திய கூட்டுறவு வங்கி விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.