திருக்குறள் ஒப்பித்தலில் தனித்திறன்: பள்ளி மாணவிக்கு ஆட்சியர் பரிசு

திருவண்ணாமலை அருகே திருக்குறள் ஒப்பித்தல், சிவபுராணம் பாடுவதில் தனித்திறன் பெற்ற அரசுப் பள்ளி

திருவண்ணாமலை அருகே திருக்குறள் ஒப்பித்தல், சிவபுராணம் பாடுவதில் தனித்திறன் பெற்ற அரசுப் பள்ளி மாணவியைப் பாராட்டி, 8 கிராம் தங்கச் சங்கிலி, எல்.இ.டி. தொக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பரிசாக வழங்கினார்.
திருவண்ணாமலையை அடுத்த சு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அண்ணாதுரை. இவரது மகள் நளாயினி (11). இவர், சு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கிறார்.
திருக்குறளின் 133 அதிகாரங்களில் உள்ள 1,330 குறள்களை எந்த வரிசையில் எப்படி மாற்றிக் கேட்டாலும் அந்தக் குறளை சரியாக சொல்லும் திறன் நளாயினிக்கு உண்டு. இவர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இது மட்டுமன்றி "சிவபுராணம்' முழுமையாக பாடும் திறனும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை அண்மையில் மாணவி நளாயினி நேரில் சந்தித்து, தான் பெற்ற பரிசுகள், புகைப்படங்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, நளாயினி குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருதி, அவரது குடும்பத்துக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். 
இதற்கான பணியை சு.நல்லூர் கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.
மேலும், மாணவியின் திறமையைப் பாராட்டும் வகையிலும், அவரை ஊக்கப்படுத்தும் வகையிலும் 8 கிராம் தங்கச் சங்கிலி அணிவித்து, புதிய எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டியையும் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) தமயந்தி, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், மலர்ந்த திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி சாமி.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com