நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு இலவச வீடுகள் கட்ட பூமிபூஜை: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

செங்கம் அருகே நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு பாரதப் பிரதமரின்

செங்கம் அருகே நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், இலவசமாக வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
செங்கம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இடம் ஒதுக்கப்பட்டு, இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த இடத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மானியம் வழங்க நரிக்குறவர் சமூகத்தினர் மனு அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, 84 குடும்பங்களுக்கும் செங்கம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பாரதப் பிரதமரின் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக நரிக்குறவர் சமூகத்தினர் வீடுகளை கட்டாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது, வீடுகள் கட்டுவது குறித்து நரிக்குறவர் சமூகத்தினருக்கு போதிய வழிமுறைகள் தெரியவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து,  84 நரிக்குறவர் கும்பத்தினருக்கும் ஒப்பந்ததாரர் மூலம் வீடுகளை கட்டி வழங்க செங்கம் பேரூராட்சிக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, 84 வீடுகள் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து வீடுகள் கட்டும் பணியைத் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம், செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ஜெசிமாபானு உள்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com