குடிநீர் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 24th July 2019 09:04 AM | Last Updated : 24th July 2019 09:04 AM | அ+அ அ- |

செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள மேட்டுத் தெரு, ரோட்டுத் தெரு, இந்திரா நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக சரிவர குடிநீர் விநியோகம் நடைபெறவில்லையாம்.
இதுகுறித்து கிராம மக்கள் மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சிச் செயலர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும், அவர்கள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு - ஆரணி சாலையில் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் தரப்பில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காத குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சிச் செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தங்கள் பகுதிக்கு உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.