Enable Javscript for better performance
கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் ரூ.52 லட்சம் கடனுதவி: அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் ரூ.52 லட்சம் கடனுதவி: அமைச்சர் வழங்கினார்

    By DIN  |   Published on : 25th July 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் 246 பேருக்கு ரூ.52.96 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
    ஆரணி வட்டம், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், கறவை மாடு கடன், பயிர்க் கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது: 
    அதிமுக அரசில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
    கடந்த 2016-ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், ரூ.44.40 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மூலம் 9,204 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
    மேலும், கடந்த மே 2011 முதல் மார்ச் 2016 வரை 32, 418 விவசாயிகளுக்கு ரூ.105.98 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 2016 முதல் ஜூன் 2019 வரை 28, 938 விவசாயிகளுக்கு ரூ.147.55 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. 
    ஆரணி தொடக்க கூட்டுறவு பண்டக சாலைக்கு ரூ.20 லட்சத்தில் அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆரணி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகியவற்றில் தலா ரூ.2.84 லட்சம் செலவில் பாதுகாப்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
     ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ரூ.2.50 லட்சம் செலவில் ரூபாய் நோட்டு பிரிக்கும் இயந்திரம், மேலும், மூன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தலா ரூ.54,000 ஆயிரம் வீதம் ரூ.1.62 லட்சம் செலவில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
    கடந்த எட்டு ஆண்டுகளில் 17 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு கூட்டுறவு விற்பனைச் சங்கம் என 18 சங்கங்களில் ரூ.4.49 கோடி மதிப்பீட்டில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.    
    அரையாளம், ஆரணி, ஆதனூர், எஸ்.வி.நகரம், கண்ணமங்கலம் ஆகிய 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றார். 
    நிகழ்ச்சியில், 15 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 200 உறுப்பினர்களுக்கு ரூ.36.60 லட்சம் கடனுதவி, 36 பேருக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு கடனுதவி, 10 பேருக்கு ரூ.5.56 லட்சம் கடனுதவி என மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.52.96 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
     கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வே. நந்தகுமார், துணைப் பதிவாளர் ர.பிரேம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் கே.சங்கர், வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் பாரி பி.பாபு, ஆரணி வைகை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், ஆரணி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அ.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai