முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு
By DIN | Published On : 30th July 2019 07:24 AM | Last Updated : 30th July 2019 07:24 AM | அ+அ அ- |

வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சார்பில் 34-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மாநாட்டுக்கு பி.ராமநாதன் தலைமை வகித்தார். ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபையின் முதன்மைச் செயலர் கே.மணிவண்ணன் வரவேற்றார்.
மாநாட்டில் கே.பி.தேவராஜன் சுவாமிகள், இராம.ஸ்ரீனிவாசன், இரா.வ.கமலக்கண்ணன், ஆர்.ஹரிணி, உ.வே.ரகுவீரபட்டாச்சாரியர் சுவாமிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாம்பட்டு பெ.பார்த்திபன் தலைமையில் பஜனை கோஷ்டிகள் ஊர்வலம் நடைபெற்றது. வந்தவாசி கோட்டை ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் சென்றடைந்தது. ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.குமார், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.