அருணாசலேஸ்வரர் கோயிலில் அமாவாசை பிரதோஷ பூஜை
By DIN | Published On : 30th July 2019 07:25 AM | Last Updated : 30th July 2019 07:25 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை ஆடி மாத அமாவாசை பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றது.
கோயிலில் உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலத்தில்: வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், அரிசி மாவு, சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றது.
ஆவூரில்:வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை திருவகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் திருவகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றன.
இதேபோல, தண்டராம்பட்டு, போளூர், ஆரணி, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்தப் பூஜைகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.