ஜவ்வாது மலையில் ஜூன் 15, 16-இல் கோடை விழா: அமைச்சர்கள் பங்கேற்பு 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் 22-ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா-2019, ஜூன் 15, 16 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் 22-ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா-2019, ஜூன் 15, 16 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
 விழாவை முன்னிட்டு ஜூன் 15, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழாவை தொடக்கிவைத்து அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகின்றனர்.
 நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு தலைமைச் செயலர், ஆணையர் சுற்றுலாத் துறை மற்றும் வேளாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
 அமைச்சர்கள், ஜவ்வாதுமலை கோடை விழாவில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்படவுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிடுகின்றனர்.
 கோடை விழாவில் மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 இதன்படி, மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டுகள், உணவு வகைகள், மலையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உள்பட பல்வேறு பொருள்கள் அடங்கிய உள்ளுர் சந்தை ஆகியவை இடம் பெறுகிறது.
 ஜமுனாமரத்தூர் கோமுட்டி ஏரியில் இந்த ஆண்டு முதல் முறையாக பறக்கும் ராட்சத பலூன் மற்றும் ஏரியை சுற்றி வருவதற்கு குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 கோடை விழா நடைபெறும் மேடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை மாலை லேசர் காட்சி மற்றும் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாய் கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டியும், சமூகநலத் துறை சார்பில் பெண்களுக்கான கோலப் போட்டியும், விளையாட்டுத் துறை சார்பில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
 தோட்டக்கலைத் துறை சார்பில் கண்கவர் மலர்கள் மற்றம் காய்கறிகள் கண்காட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீத் தடுப்பு மற்றும் பேரிடர் குறித்த விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம், சித்த மருத்துவ முகாம், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
 விழா நடைபெறும் இரு நாள்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம்பாட்டம், குற்றாலக் குறவஞ்சி நாடகம், மேளம், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 கூட்டுறவு நியாய விலைக் கடை, ஆவின், கைத்தறித் துறை, கோ-ஆஃப்டெக்ஸ், காதி, மகளிர் திட்டம், மீன் வளர்ச்சிக் கழகம் ஆகிய துறைகளின் விற்பனை பொருள்கள் கண்காட்சி இடம் பெறுகிறது.
 மேலும், அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகள் ஜூன் 15, 16 ஆகிய இரு நாள்களும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
 இந்த 22-வது ஜவ்வாதுமலை கோடை விழாவில் மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com