தனி ஊராட்சி: நடுப்பட்டு கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு

ஆரணியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக முதல் அமர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

ஆரணியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக முதல் அமர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேற்கு ஆரணி ஒன்றியத்தில் விண்ணமங்கலம் ஊராட்சியில் நடுப்பட்டு கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் உள்ள இரண்டு தெருக்கள் வந்தவாசி தொகுதியில் உள்ள பெரணமல்லூர் ஒன்றியம், கோனையூர் ஊராட்சியில் வருகிறது. மேலும் உள்ள தெருக்கள் அருகே உள்ள விண்ணமங்கலம் ஊராட்சியில் வருகிறது.
 ஆகையால், கோனையூர் ஊராட்சியில் உள்ள இரண்டு தெருக்களும், விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள மீதமுள்ள தெருக்களையும் இணைத்து நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து வருகின்றனர். 
 இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடுப்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய முதல் அமர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் நடுப்பட்டு கிராம மக்கள் கூறியதவாது:
ரேஷன் பொருள்கள் வாங்க  2 கி.மீ. தொலைவில் உள்ள கோனையூர் ஊராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகளை அங்கன்வாடியில் சேர்க்கவும் சிரமமாக உள்ளது. மேலும், மருத்துவமனைக்கு தச்சூர் செல்வதா, கொழப்பலூர் செல்வதா என்ற குழப்பம் நீடிக்கிறது.
கடந்த பொங்கல் திருநாளுக்கு வந்த இலவச வேட்டி, சேலைகள் வாங்க முடியவில்லை. விண்ணமங்கலம் ஊராட்சிக்கு நிதி வருவதில், குறைவான நிதியில் இப்பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன. பசுமை வீடுகள் குறைவாகவே கிடைக்கிறது. ஊராட்சி தலைவரை விண்ணமங்கலம் சென்றுதான் சந்திக்க வேண்டியுள்ளது. ஊராட்சி கிராம நிர்வாகியையும் விண்ணமங்கலம் சென்றுதான் பார்க்கவேண்டும் என்பன
 உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனி ஊராட்சியாக நடுப்பட்டு கிராமத்தை அறிவிக்க வேண்டும் என்றனர்.
 இதையடுத்து பேசிய ஆட்சியர் கந்தசாமி,  நடுப்பட்டு கிராமத்தில் உள்ள கோனையூர் ஊராட்சிக்கு உள்பட்ட இரண்டு தெருக்களை நடுப்பட்டு கிராமத்தில் இணைத்து புதிதாக நடுப்பட்டு பஞ்சாயத்தாக அறிவிக்கப்படவுள்ளது. இரண்டாவது அமர்வு கூட்டம் நடத்தப்பட்டு,  புதிய நடுப்பட்டு ஊராட்சி அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஜெயசுதா, வட்டாட்சியர் தியாகராஜன், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com