பூங்குணம் சீனிவாசப் பெருமாள், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th June 2019 07:26 AM | Last Updated : 14th June 2019 07:26 AM | அ+அ அ- |

பெரணமல்லூர் அருகே பூங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், சீனிவாசப் பெருமாள், முத்துமாரியம்மன் ஆகிய கோயில்களின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பூங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், சீனிவாசப் பெருமாள், முத்துமாரியம்மன் கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்று, மேள தாளம் முழங்க புனிதநீர் கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 10 மணிக்கு வேதமந்திரங்கள் கூறி விநாயகர், சீனுவாசப் பெருமாள், முத்து மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.