குப்பை, கழிவுகள் வைக்கும் இடமாக மாறிய தண்ணீர் பந்தல்
By DIN | Published On : 18th June 2019 09:50 AM | Last Updated : 18th June 2019 09:50 AM | அ+அ அ- |

போளூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, பழம் விற்பனை செய்யும் சில வியாபாரிகள் கழிவுகளைப் போடும் இடமாக மாற்றிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வைக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் உள்ளது. மேலும், மாநிலத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், போளூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்க, கடந்த 20 நாள்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகம் அருகே, வேலூர்-திருவண்ணாமலை சாலை ஆஞ்சநேயர் சிலை பகுதி என இரு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதில், ஆஞ்சநேயர் சிலை பகுதியில் உள்ள தண்ணீர் பந்தலில் பானைகளில், பேரூராட்சி ஊழியர்கள் சரிவர தண்ணீர் ஊற்றி வைக்காததாலும், தண்ணீர் பந்தலை பராமரிக்கத் தவறியதாலும், அப்பகுதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள் பலாப்பழ தோல் மற்றும் பலாப்பழ கழிவுகளை வைக்கும் இடமாக மாற்றிவிட்டனர். இதனால் பொதுமக்கள் அங்கு சென்று தண்ணீர் பருக முடியாத நிலை நீடிக்கிறது.
எனவே, தண்ணீர் பந்தலை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பேரூராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.