மின் கம்பிகள் இணைக்கும் பணிக்கு எதிர்ப்பு: உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

திருவண்ணாமலை அருகே உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகள் இணைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

திருவண்ணாமலை அருகே உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகள் இணைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதாகவும், எனவே, உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்துக்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட குண்ணுமுறிஞ்சி கிராமப் பகுதிகளில் சிறு விவசாயிகளின் நிலங்களில் உயர் மின் கோபுரங்களுக்கு இடையே மின் கம்பிகளை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது.
 தகவலறிந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் கோபுரங்கள் அமைப்பதற்கு முன்பாக நிலத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.
 அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் அவதூறாகப் பேசினராம். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ்குமார் ஆகியோர் உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 தகவலறிந்து வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், பலராமன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், முத்த தலைவர் எம்.வீரபத்திரன் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உயர்மின் கோபுரங்களில் மின் கம்பிகள் இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
 இதற்கிடையே, புதன்கிழமை (ஜூன் 18) மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று போலீஸார் கூறினர்.
 இதையடுத்து, உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயிகள் கீழே இறங்கி வந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com