சுடச்சுட

  

  மழை பெய்ய வேண்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 470 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து 30 நாள்களுக்கு திருக்குறள் வாசித்து வழிபடும் நிகழ்ச்சியை, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கிவைத்தார்.
   தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை வேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு யாகம், வேள்விகள் நடத்தப்பட்டு வருகின்றன.
   இந்த நிலையில், மழை வேண்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 470 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 30 நாள்களுக்கு திருக்குறள் வாசித்து வழிபடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
   திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வான் சிறப்பு குறள் வாசித்தல் விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் குமார் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை சி.வளர்மதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மழையின் சிறப்பைப் பாராட்டி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து திருக்குறளின் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் உள்ள குறள்களை தொடர்ந்து 30 நாள்களுக்கு வாசிக்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசினார்.
   விழாவில், பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் போர்மன்னன் கே.ராஜா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் திருக்குறளை வாசிக்க ஏதுவாக அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai