தனி ஊராட்சி அந்தஸ்து கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்னா
By DIN | Published On : 02nd March 2019 09:41 AM | Last Updated : 02nd March 2019 09:41 AM | அ+அ அ- |

ஆரணி அருகே நடுப்பட்டு கிராமத்திலுள்ள 8 தெருக்களையும் உள்ளடக்கி, இந்தக் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற தங்களது 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, நடுப்பட்டு கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய 2 வட்ட அலுவலக எல்லைகளுக்கு உள்பட்டது நடுப்பட்டு கிராமம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 1,099 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 871 வாக்காளர்கள் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியிலும், 228 வாக்காளர்கள் போளூர் சட்டப் பேரவைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளனர்.
8 தெருக்களைக் கொண்ட இந்தக் கிராமத்தின் 6 தெருக்கள் ஆரணி வட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உள்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 2 தெருக்கள் சேத்துப்பட்டு வட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உள்பட்ட கோனையூர் ஊராட்சியில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 தெருக்கள் ஒரு ஊராட்சியிலும், 2 தெருக்கள் மற்றொரு ஊராட்சியிலும் இடம்பெற்றிருப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக, சாலை, குடிநீர், கழிப்பறை, நியாயவிலைக் கடை, பள்ளிக்கூடம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லையாம்.
எனவே, நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 8 தெருக்களையும் உள்ளடக்கி, இந்தக் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
3 மணி நேரம் தர்னா: இந்த நிலையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, அண்மையில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் நடுப்பட்டு கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்ட அந்தக் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர்.
இவர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, 61 ஆண்டு கால தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, தேர்தலுக்குள் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடுப்பட்டு கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். இதன்பிறகே, கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.