பைக் மீது வேன் மோதல்: சிறுவன் சாவு
By DIN | Published On : 04th March 2019 09:27 AM | Last Updated : 04th March 2019 09:27 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே பைக் மீது வேன் மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது பெற்றோர் காயமடைந்தனர்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (40). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களது மகன்கள் சக்திவேல் (9), அஸ்வின் (7).
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கமணி, லட்சுமி, அஸ்வின் ஆகிய 3 பேரும் உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வாலிபுரம் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் பொன்னூர் வனப்பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த பயணிகள் வேன் இவர்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், வழியிலேயே அஸ்வின் உயிரிழந்தார்.
தங்கமணி, லட்சுமி ஆகியோர் தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பொன்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.