சுடச்சுட

  


       திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
  வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. காற்று சுவாசம் கொண்ட இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும்.
  இந்த மீன்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இவை நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால், அவைகளை அழிப்பது சாத்தியமில்லாதது. இவை மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனம்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.
  இந்த வகை மீன்கள் நம் நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்கள், அதன் முட்டைகளை உணவாக்கிக் கொள்வதால், நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும். பண்ணைக் குட்டைகளிலோ, மீன் வளர்ப்பு குளங்களிலோ இவ்வகை மீன்களை இருப்பு செய்து வளர்த்தால் மழை, வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களில் இருந்து தப்பிச் செல்லும் வாய்ப்புள்ளது.
  இவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் குறிப்பிட்ட காலத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களைத் தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். இதனால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நம் உள்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கவும், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் வழியில்லாமல் போகும்.
  எனவே, திருவண்ணாமலை மாவட்ட மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கெனவே மீன் பண்ணைகளில் இந்த இன மீன்களை வளர்த்து வருவோர் அவற்றை அழிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பையும் மீறி மீன் வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் குறித்து 0416 - 2240329 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai