சுடச்சுட

  

  பாசன நீரின்றி கருகும் நெல் பயிர்கள்: கால்நடைகள் மேயும் அவலம்கள்

  By DIN  |   Published on : 17th March 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததாலும், ஆறுகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருவதாலும் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், நெல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், காய்ந்து வரும் நெல் வயல்களில் விவசாயிகள் கால்நடைகளை  மேய்த்து வருகின்றனர்.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததாலும், செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருவதாலும், கோடை வெப்பம் அதிகரித்துள்ளதாலும் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
  இதனால், ஆத்துரை, சித்தாத்துரை, மன்சுராபாத், காட்டுதெள்ளூர், தச்சாம்பாடி உள்ளிட்ட சேத்துப்பட்டு ஒன்றியப் பகுதிகளிலும், செங்கம் வட்டாரத்திலும் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகளால் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  இதன் காரணமாக, இந்தப் பயிர்கள் வெயிலில் காய்ந்து வருகின்றன. 
  இந்த நிலையில், காய்ந்து வரும் நெல் பயிர்களில் விவசாயிகள் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர்.
  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சொர்ணவாரி பருவத்தில் கிணற்றுப் பாசனத்தை நம்பி நெல் விதை விதைத்து நடவு செய்துள்ளோம். இதுவரை நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நெல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. கடந்தாண்டு நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்தத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை.
  இதன் காரணமாக, நிகழாண்டு நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்யவில்லை. எனவே, காய்ந்து வரும் நெல் பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு அரசியடமிருந்து உரிய நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai