தொழிலாளியிடம் ரூ.3 ஆயிரம் நூதன மோசடி
By DIN | Published On : 22nd March 2019 09:36 AM | Last Updated : 22nd March 2019 09:36 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே தொழிலாளிக்கு அஞ்சல் மூலம் பார்சல் அனுப்பி வைத்து நூதன முறையில் ரூ.3 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் (35). இவரது செல்லிடப்பேசிக்கு அண்மையில் தொடர்புகொண்ட மர்ம நபர், உங்கள் செல்லிடப்பேசி எண் அதிர்ஷ்ட எண்ணாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தங்க நாணயங்கள் வழங்கப்படவுள்ளது என்றும், அஞ்சல் மூலம் அனுப்பப்படும் தங்க நாணயங்கள் அடங்கிய பார்சலை ரூ.3 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினாராம்.
அதன்படி, புதன்கிழமை வானாபுரம் அஞ்சல் நிலையத்தில் இருந்து பார்சல் வந்ததாம். ரூ.3 ஆயிரத்தை செலுத்தி பார்சலை வாங்கி பிரித்து பார்த்த செல்வம், அதில் காலியான 2 பர்ஸ்கள், ஒரு பெல்ட் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வானாபுரம் போலீஸில் செல்வம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...