100 சதவீத வெற்றி இலக்கை அடைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, திமுக சார்பில் சனிக்கிழமை இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்தான் திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. அவரை வேட்பாளராக அறிவித்தது நாட்டுக்கே அவமானம். அவரைத் தோற்கடிக்க வேண்டும். 
திமுக வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் கூறியுள்ளார். வன்முறையின் அடையாளமே பாமக தான் என ஜெயலலிதா சட்டப்பேரவையிலேயே பேசினார். பாமக வன்முறை இல்லாத கட்சி என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லத் தயாரா...?. 
ஸ்டாலின் திமிராக பேசுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். கடவுள் இல்லை எனக் கூறிய முதல்வரை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால், நான் தான் கடவுள் என்று கூறுபவர்தான் எடப்பாடி. இதை விடத் திமிர் வேறு எதுவும் இருக்குமா...? 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் விண்ணப்பத்தில் இடப்பட்டது ஜெயலலிதாவின் கைரேகையே அல்ல என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால், அந்தத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஜெயலலிதா எந்த நிலைமையில் இருந்தார் என்ற சந்தேகம் வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சிறையில் அடைப்போம். இதுதான் என் முதல்வேலை. இதற்கான முன்னோட்டம் தான் இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தல். 
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி இலக்கை அடைய வேண்டும். 
திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, ஓசூர் வழியாக ரயில் பாதை அமைக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு, எம்எல்ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், அம்பேத்குமார், நல்லதம்பி உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com