திருவண்ணாமலை: முதல் முறையாக வென்ற அதிமுக 

இந்திய மக்களவைக்கு இதுவரை 16 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக 2014-இல்தான் அதிமுக வெற்றி பெற்றது.



இந்திய மக்களவைக்கு இதுவரை 16 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக 2014-இல்தான் அதிமுக வெற்றி பெற்றது.
1951-52-இல் இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாததால் சென்னை மாகாணமாக இருந்தது. திருவண்ணாமலை என்றொரு மாவட்டமே அப்போது இல்லை. இப்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி வந்தவாசி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலில் பொதுநலக் கட்சி சார்பில் போட்டியிட்ட முனிசாமி வெற்றி பெற்றார்.
திமுகவின் தொடர் வெற்றிகள்: 1957-இல் நடைபெற்ற 2-ஆவது மக்களவைத் தேர்தலின்போது, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி தொகுதியில் இருந்த சில பகுதிகளைப் பிரித்து 4 லட்சத்து 26 ஆயிரத்து 665 வாக்காளர்களைக் கொண்ட திருவண்ணாமலை தொகுதி உருவாக்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் திமுக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட தர்மலிங்கம் வெற்றி பெற்றார். 1962-இல் நடைபெற்ற 3-ஆவது மக்களவைத் தேர்தலிலும் திமுக சார்பில் 2-ஆவது முறையாக போட்டியிட்ட தர்மலிங்கம் வெற்றி பெற்றார்.
1967-இல் நடைபெற்ற 4-ஆவது மக்களவைத் தேர்தலில், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக திருவண்ணாமலை தொகுதி கலைக்கப்பட்டு  திண்டிவனம் தொகுதியில் சேர்க்கப்பட்டது. 
அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.டி.ஆர்.நாயுடு வெற்றி பெற்றார்.
மீண்டும் உதயமான வந்தவாசி தொகுதி: 1971-இல் நடைபெற்ற 5-ஆவது மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு, திண்டிவனம் தொகுதியில் இருந்த திருவண்ணாமலை பகுதிகள் வந்தவாசி பொதுத் தொகுதியில் சேர்க்கப்பட்டது. 5 லட்சத்து 39 ஆயிரத்து 245 வாக்காளர்களைக் கொண்ட அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரான ஜி.விஸ்வநாதன் (விஐடி வேந்தர்) 2 லட்சத்து 30 ஆயிரத்து 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1977-இல் நடைபெற்ற 6-ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1980-இல் நடைபெற்ற 7-ஆவது மக்களவைத் தேர்தலில்  இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ) வேட்பாளர் டி.பட்டுசாமி வெற்றி பெற்றார்.
1984-இல் நடைபெற்ற  8-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எல்.பலராமன் வெற்றி பெற்றார். 1989-இல் நடைபெற்ற 9-ஆவது மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் எல்.பலராமனே வெற்றி பெற்றார். 1991-இல் நடைபெற்ற 10-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி (முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) வெற்றி பெற்றார். 1996-இல் நடைபெற்ற 11-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் எல்.பலராமன் வெற்றி பெற்றார்.
2 முறை பாமக வெற்றி: 1998-இல் நடைபெற்ற 12-ஆவது மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் எம்.துரை வெற்றி பெற்றார். 1999-இல் நடைபெற்ற 13-ஆவது மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் எம்.துரை மீண்டும் வெற்றி பெற்றார்.
2004-இல் நடைபெற்ற 14-ஆவது மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் செஞ்சி என்.ராமச்சந்திரன் வெற்றி பெற்று, மத்திய அமைச்சரானார்.
ஆரணி, திருவண்ணாமலை தொகுதிகள் உதயம்: 2009-இல் நடைபெற்ற 15-ஆவது மக்களவைத் தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி கலைக்கப்பட்டு, ஆரணி, திருவண்ணாமலை தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் சேர்க்கப்பட்டன. திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நகராட்சிகளும், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. 10 லட்சத்து 52 ஆயிரத்து 587 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.வேணுகோபால் வெற்றி பெற்றார்.
முதல் முறையாக அதிமுக வெற்றி: திருவண்ணாமலை தொகுதி உருவான பிறகு, 2014-இல் நடைபெற்ற 16-ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வனரோஜா 5 லட்சத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திமுக-அதிமுக நேரடிப் போட்டி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. ஜோலார்பேட்டை, கலசப்பாக்கம் என 2 தொகுதிகள் மட்டுமே அதிமுக வசம் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் முன்னாள் தமிழக வேளாண்துறை அமைச்சரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை-சென்னை ஆகிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான நான்கு வழிச் சாலை மேம்பாட்டுப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு போன்ற பிரச்னைகளும், மேல்செங்கத்தில் மத்திய, மாநில விதைப்பண்ணையில் விவசாயக் கல்லூரி அமைக்க வேண்டும், செங்கம் பகுதியில் வாசனை திரவியம் (சென்ட்) தொழில்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் தொடர்கின்றன.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com