Enable Javscript for better performance
பங்குனி உத்திரம்: அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரம்: அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் நிறைவு

    By DIN  |   Published on : 27th March 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாலிகை விடுதல், உத்ஸவர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
     திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் மிதுன லக்கினத்தில் மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றன.
     இரவு 9 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் எதிரே ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் எழுந்தருளி மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வும், நள்ளிரவு 12 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உத்ஸவர் திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றன.
     3 நாள் நலங்கு உத்ஸவம்: வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இரவு வேளைகளில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் 3 நாள் நலங்கு உத்ஸவம் நடைபெற்றது.
     நிறைவு நாள் நிகழ்ச்சிகள்: விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு தாமரைக் குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி, தாமரைக் குளம் ராஜா மண்டபத்தில் உத்ஸவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மாலை 6 மணிக்கு குமரக்கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சி, உத்ஸவர் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்துடன் இந்தக் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் நிறைவு பெற்றது.
     விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai