Enable Javscript for better performance
காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியாது: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

    By  வந்தவாசி/ஆரணி,  |   Published on : 28th March 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சியால் வறுமையை ஒழிக்க முடியாது என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.
     வந்தவாசி தேரடியில் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:
     வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி கூறுகிறார். 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை.
     காவிரி பிரச்னை, கச்சத்தீவு தாரைவார்ப்பு என பல்வேறு துரோகங்களை காங்கிரஸ் தமிழகத்துக்கு செய்துள்ளது. காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவுடன் இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார். ஆனால், அப்போது கருணாநிதியோ தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்று வேடிக்கை செய்தார். எனவே, இந்த இரு கட்சிகளையும் தமிழக மக்கள் மன்னிக்கக் கூடாது.
     அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை 10 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்துள்ளேன். அதிமுகவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆளும் அதிமுக மட்டுமே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். இனி எந்தக் காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.
     இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் அவர்.
     ஆரணியில்...: இதேபோல, ஆரணி அண்ணா சிலை அருகில் அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
     திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் அனைத்தும் சாத்தியமே இல்லாத திட்டங்கள். பாஜக கூட்டணியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
     மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
     கூட்டங்களில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், பாமக மாநில துணைத் தலைவர் மு.துரை, மாநில துணை பொதுச் செயலர் ஆ.வேலாயுதம், மாவட்டச் செயலர்கள் க.சீனுவாசன், கலைமணி, பாஜக மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், தேமுதிக மாவட்டச் செயலர் ஆ.கோபிநாதன், தமாகா மாவட்டத் தலைவர் தாமோதரன், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai