குடிநீரில் ரசாயன பவுடர் கலந்து வன விலங்குகள் வேட்டையாடல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 12:03 AM | Last Updated : 05th May 2019 12:03 AM | அ+அ அ- |

செங்கம் பகுதியில் குடிநீரில் ரசாயன பவுடர் கலந்து வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
செங்கம் சுற்றுப்புறப் பகுதியில் தற்போது மழை இல்லாத காரணத்தால் வனப் பகுதியில் காட்டு விலங்குகளுக்கு தண்ணீல் இல்லை. இதனால், காட்டு விலங்குகள் மாலை நேரத்தில் விவசாய நிலங்களைத் தேடி தண்ணீர் குடிக்க வரும்போது அவற்றை வேட்டையாடி இறைச்சியை விற்று வந்தனர்.
தற்போது கடும் வறட்சியைப் பயன்படுத்தி பகல் நேரத்தில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் யூரியா, ரசாயன பவுடரைக் கலந்து குடிதண்ணீர் இருப்பது போல வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தரையில் பதித்து வைத்து விடுகின்றனர். வன விலங்குகள் அந்தத் தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் துடி துடித்து இறந்து விடுகிறதாம். அதை எடுத்து இறைச்சியாக்கி விற்பனை செய்து விடுகின்றனராம். எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை வனத் துறையினர் கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.