கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்: அரசுப் பேருந்து சிறை பிடிப்பு
By DIN | Published On : 07th May 2019 09:18 AM | Last Updated : 07th May 2019 09:18 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி, அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 15 நாள்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், கிராம மக்கள் திங்கள்கிழமை காலை அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மகாதேவன், காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயகாந்தன், தமிழரசு, வருவாய் ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஓரிரு நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர் மகாதேவன் உறுதி அளித்தார். இதையடுத்து, சாலை
மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.