மாதா கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
By DIN | Published On : 16th May 2019 09:39 AM | Last Updated : 16th May 2019 09:39 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாதா கோயில் திருவிழாவின் போது, மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர்.
செங்கத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் ஒன்றியம், அல்லியந்தல் கிராமத்தில் தூய லூர்து மாதா தேவாலய தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட லூர்து மாதா சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, மின் கம்பியில் சிலையின் மேல் இருந்த சிலுவை உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஊர்வலத்தில் பங்கேற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு (50), ஜெபராஜ் (49) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த புலோமின் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாய்ச்சல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.