கிரிவலப் பாதையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 6 பெண்கள் கைது
By DIN | Published On : 20th May 2019 09:04 AM | Last Updated : 20th May 2019 09:04 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பச்சிளங்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 6 பெண்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அப்போது, கிரிவலப் பாதையின் பல இடங்களில் பச்சிளங்குழந்தைகளை கையில் வைத்து பெண்கள் சிலர் பிச்சை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி தலைமையில், சிறப்புக் குழு அமைக்கப்பட்டு திருவண்ணாமலை - செங்கம் சாலை, எமலிங்கம், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வயதுக்கு உள்பட்ட கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 6 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.