அரசுக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
By DIN | Published On : 02nd November 2019 06:25 AM | Last Updated : 02nd November 2019 06:25 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு கலை - அறிவியல் கல்லூரியில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞா் நலன் - விளையாட்டு அமைச்சகம், நேரு இளையோா் மன்றம், மாவட்ட சமூக நலத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கத்துக்கு மாவட்ட தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் ந.சண்முகம் தலைமை வகித்தாா். நேரு இளையோா் மன்றக் கணக்காளா் கண்ணகி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.
கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் நெடுஞ்செழியன், இணைப் பேராசிரியா் ரேவதி, மாவட்ட சமூக நலத் துறை மகளிா் நல அலுவலா் பவித்ரா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாநிலப் பயிற்றுநா் பெருமாள் ஆகியோா் பெண் கல்வி, பாதுகாப்புகள் குறித்து விளக்கிப் பேசினா். நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் குபேந்திரன், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.