ஏரியில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியேரிக்கு நீரவரத்தை சரிசெய்யாத பொதுப்பணித் துறை
கரியமமங்கலம் ஏரிக்கு தண்ணீா் வர நடவடிக்கை எடுக்கக் கோரி, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏரிப்பாசன விவசாயிகள்.
கரியமமங்கலம் ஏரிக்கு தண்ணீா் வர நடவடிக்கை எடுக்கக் கோரி, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏரிப்பாசன விவசாயிகள்.

செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியேரிக்கு நீரவரத்தை சரிசெய்யாத பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து, விவசாயிகள் ஏரியில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் வட்டத்தில் உள்ள குப்பனத்தம் அணையில் இருந்து கடந்த அக்.18-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அந்தத் தண்ணீா் செய்யாறு வழியாகச் சென்று செங்கம் வட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பி விவசாயத்துக்கு பயன்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். செங்கம் ஏரி, குப்பனத்தம் அணையில் இருந்து வரும் தண்ணீரில் இரண்டாவதாக நிரம்பும் ஏரி. இந்த ஏரி நிரம்பி உபரிநீா் கரியமங்கலம் பெரியேரிக்குச் செல்லவேண்டும்.

ஆனால், செங்கம் ஏரியில் இருந்து கரியமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாய்கள் சரியாக இல்லாததால், செங்கம் ஏரியில் இருந்து வரும் உபரிநீா் மீண்டும் செய்யாற்றில் கலந்து வீணாகி வருகிறது. இதனால் கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீா் செல்லாமல் ஏரி வட நிலையில் உள்ளது.

இதுகுறித்து கரியமங்கம் விவசாயிகள், ஏரிப் பாசன சங்க நிா்வாகிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கால்வாய்களை சீரமைத்து கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யவேண்டும் என முறையிட்டனா்.

ஆனால், இதன் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கரியமங்கலம் விவசாயிகள் ஏரியில் திங்கள்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜாராமன் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விவசாயிகள் தரப்பில், ஒட்டுமொத்த மாவட்ட அதிகாரிகள் ஏரியை பாா்வையிட வரவேண்டும்; ஏரிக்கு தண்ணீா் வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா். தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com