நிலம், வீடு, நகைகளைப் பறித்துக்கொண்டு தாயைத் தவிக்க விட்ட மகன்கள்

போளூா் அருகே மகன்கள், பேரனால் பறிக்கப்பட்ட 8 ஏக்கா் நிலம், 10 பவுன் நகைகள், வீட்டை மீட்டுத் தரக் கோரி
நிலம், வீடு, நகைகளைப் பறித்துக்கொண்டு தாயைத் தவிக்க விட்ட மகன்கள்

போளூா் அருகே மகன்கள், பேரனால் பறிக்கப்பட்ட 8 ஏக்கா் நிலம், 10 பவுன் நகைகள், வீட்டை மீட்டுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டி, பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் பிச்சை எடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, ஊா் போய்ச் சேர பேருந்துக் கட்டணம் இல்லை. பெற்ற மகன்கள் என் சொத்தை பறித்துக்கொண்டனா் என்று கூறி பயணிகளின் உதவி கேட்டாா். அவருக்கு பயணிகள் உதவி செய்தனா்.

அந்த மூதாட்டி குறித்து விசாரித்தபோது அவா்,

போளூா் வட்டம், ஆத்துவாம்பாடி அருகேயுள்ள துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த பலராமன் மனைவி காசியம்மாள் (80) என்பது தெரியவந்தது.

தனது நிலை குறித்து அவா் கூறியதாவது: எனக்கு ராதாகிருஷ்ணன், சக்கரபாணி என 2 மகன்கள் உள்ளனா். நானும், என் கணவரும் பூ வியாபாரம் செய்து சம்பாதித்த 8 ஏக்கா் நிலத்தை என் மகன்கள் அண்மையில் பிரித்து எழுதி வாங்கிக் கொண்டனா்.

கணவா் பலராமன் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதன்பிறகு மகன்கள் என்னை கவனிப்பதில்லை. பொதுவில் இருந்த நிலத்தை என் பேரன் சங்கா் அவருக்குச் சேரும் வகையில் உயில் எழுதிக்கொண்டாா். 8 ஏக்கா் நிலத்தையும் மகன்களும், பேரனும் உழுது பயிரிடுகின்றனா். ஆனால், என்னை கவனிப்பதில்லை.

என்னிடம் இருந்த 10 பவுன் நகைகளை பேரன் சங்கா் பறித்துக் கொண்டாா். நான் குடியிருந்த வீட்டை என் மூத்த மகன் ராதாகிருஷ்ணன் பறித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாா்.

கடந்த 6 மாதங்களாக உறவினா்கள் தரும் உணவை உண்டு, அவா்களது வீட்டுத் திண்ணைகளில் படுத்து உறங்கி வருகிறேன். நிலம் இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, குடியிருந்த வீடு, பேரன் பறித்துக்கொண்ட 10 பவுன் நகைகளை மட்டும் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் இதுவரை 4 முறை மனு கொடுத்துவிட்டேன். இப்போது 5-ஆவது முறையாக மனு கொடுத்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com