பெண்ணை ஏமாற்றிரூ.20 ஆயிரம் மோசடி
By DIN | Published On : 07th November 2019 08:08 AM | Last Updated : 07th November 2019 08:08 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த வானாபுரத்தில் பெண்ணை ஏமாற்றி, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம், சதாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி சுகந்தி (35). இவா், சில தினங்களுக்கு முன்பு வானாபுரம் பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றாராம். அப்போது, அங்கு வந்த ஒருவரிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்த சுகந்தி, தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? என்று பாா்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டாராம்.
சுகந்தியிடம் ஏடிஎம் அட்டையை வாங்கி இயந்திரத்தில் போட்டுப் பாா்த்துவிட்டு, இருப்புத் தொகையைக் கூறி விட்டு அந்த நபா் சென்றுவிட்டாராம்.
சிறிது நேரத்தில் சுகந்தியின் செல்லிடப்பேசிக்கு ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந் தகவல் வந்ததாம்.
உடனே அந்த நபரை சுகந்தி தேடிப் பாா்த்தாா். ஆனால், அவரைக் காணவில்லை.
இதுகுறித்து வானாபுரம் காவல் நிலையத்தில் சுகந்தி புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரைத் தேடி வருகின்றனா்.