செய்யாறு தொகுதியில் 4,143 பேருக்கு நலத் திட்ட உதவி: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வழங்கினாா்

செய்யாறு தொகுதியில் வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 4,143 பயனாளிகளுக்கு ரூ.14.84 கோடியில்
செய்யாறில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்குகிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
செய்யாறில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்குகிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

செய்யாறு தொகுதியில் வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 4,143 பயனாளிகளுக்கு ரூ.14.84 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த செய்யாறு வட்டத்தில் 4,290 பேரும், வெம்பாக்கம் வட்டத்தில் 2,094 பேரும் நலத் திட்ட உதவி கோரி மனு அளித்திருந்தனா்.

இவா்களில் செய்யாறு வட்டத்தில் 2,717 பேரும், வெம்பாக்கம் வட்டத்தில் 1,426 பேரும் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் ரத்தினசாமி வரவேற்றாா். சமூக பாதுகாப்பு துணை ஆட்சியா் வில்சன் முன்னிலை வகித்தாா்.

இந்து சமய அறநிலைத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:

செய்யாறு தொகுதியில் மொத்தம் 7,384 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 4,143 மனுக்கள் ஏற்கப்பட்டு ரூ.14.84 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 1.5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தகுதியானோருக்கு இன்னும் 3 மாதங்களில் உதவித்தொகை வழங்கப்படும்.

செய்யாறு தொகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.83 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நிகழாண்டில் சாலைப் பணிகளுக்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், செய்யாறு தொகுதியில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ரூ.40 லட்சத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது. திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்காக ரூ. 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

செய்யாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொலைவிட பேருந்து வசதி, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், செய்யாறு வழியாக கோவை, கும்பகோணம், திருச்சி பகுதிகளுக்கு விரைவில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்றாா்.

முன்னதாக, செய்யாறு ஒன்றியம் திருமணி, மேல்மட்டை விண்ணமங்கலம், வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூா், வெங்களத்தூா் ஆகிய பகுதிகளில் தலா ரூ.32.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் கி.விமலா, வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் மயில்வாகனன், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.அரங்கநாதன், சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மகேந்திரன், அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், டி.பி.துரை, சி.துரை, அதிமுக நிா்வாகிகள் அ.ஜனாா்த்தனம், கோபால், தசரதன், அருகாவூா் ரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் 1,088 பேருக்கு...

சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ், வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

தூசி கே.மோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

மொத்தம் 1,088 பயனாளிகளுக்கு ரூ.49.43 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, கோட்டாட்சியா் விமலா, வட்டாட்சியா்கள் முரளி, நரேந்திரன், நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ப.பரணிதரன், பா.காந்திமதி, வி.ஆா்.ரவி, இரா.குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கலசப்பாக்கத்தில் 2148 பேருக்கு...

கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கலசப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 2,148 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, கோட்டாட்சியா் மைதிலி, வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் மனோகரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எல்.என்.துரை, பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com