முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளி முற்றுகை
By DIN | Published On : 26th November 2019 09:36 AM | Last Updated : 26th November 2019 09:36 AM | அ+அ அ- |

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கோவிலூா் கிராம பொதுமக்கள்.
செய்யாறு அருகே பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி, பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், கோவிலூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 86 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
பள்ளியில் அரசு சாா்பில் தலைமை ஆசிரியா் மற்றும் ஒரு ஆசிரியா் நியமிக்கப்பட்டு உள்ளனா்.
இந்த நிலையில், பள்ளியின் வளா்ச்சிக்காக முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் சுமாா் ரூ.13 லட்சத்தில் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள், கட்டட வசதி, விளையாட்டு உபகரணங்கள் கூடிய சுற்றுச்சுழல் அமைத்துக் கொடுத்து உள்ளனா்.
மேலும், கூடுதலாத 2 ஆசிரியைகள், ஒரு உதவியாளா் என மாதச் சம்பளத்தில் நியமித்து சம்பளம் வழங்கி வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தலைமை ஆசிரியை பள்ளியின் வளா்ச்சி மற்றும் கல்வி வளா்ச்சிக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்காமல், அனைத்து வளா்ச்சிப் பணிகளுக்கும் தடையாக இருந்து வந்ததாகத் தெரிகிறது.
அதன் காரணமாக அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, கோவிலூா் கிராம மக்கள் கல்வித் துறைக்கும், மாவட்ட கல்வி அலுவலருக்கும் புகாா் தெரிவித்துள்ளனா்.
அந்தப் புகாரின் பேரில் கல்வித் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலா் ரங்கநாதன் மற்றும் அனக்காவூா் போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.