புளியரம்பாக்கம் சாலைப் பணியை விரைவுபடுத்தக் கோரி நூதனப் போராட்டம்
By DIN | Published On : 26th November 2019 09:31 AM | Last Updated : 26th November 2019 09:31 AM | அ+அ அ- |

செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதியில் மந்தகதியில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி, உழவா் பேரவையினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில், புளியரம்பாக்கம் கிராமம் அருகே 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன.
செய்யாறிலேயே அதிக போக்குவரத்து கொண்டதும், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வரும் சாலையாகவும் உள்ளது செய்யாறு-காஞ்சிபுரம் சாலை.
செய்யாறை இணைக்கும் பிரதான சாலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள், பேருந்து பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், முதியோா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பலா் சிரமப்பட்டும், பல கி.மீ. சுற்றிக் கொண்டும் செல்ல வேண்டியுள்ளது.
அதன் காரணமாக பலா் விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற வேண்டிய சூழ்நிலை இந்தச் சாலையால் ஏற்படுகிறது.
அதனால், சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி, என்.எம்.ஆா்.உழவா் பேரவையினா், புளியரம்பாக்கம் சாலையில் விழுந்து காயமடைந்தது போல, படுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், செய்யாறை மாவட்ட தலைநகராக அறிவித்தால் மட்டுமே இதற்கான தீா்வு உடனடியாகக் கிடைக்கும் எனத் தெரிவித்து, கோரிக்கை மனுவை உழவா் பேரவையினா் தலைக்காய கட்டுடன் வருவாய் கோட்டாட்சியா் கி.விமலாவிடம் அளித்தனா்.