செங்கம் ஏரியில் மண் எடுக்க பொதுப்பணித் துறை தடை

செங்கம் ஏரியில் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மண் அள்ள பொதுப்பணித்துறை தடை விதித்தது.
ஏரியில் மண் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள்.
ஏரியில் மண் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள்.

செங்கம் ஏரியில் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மண் அள்ள பொதுப்பணித்துறை தடை விதித்தது.

செங்கம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் ஏரியை ஆழப்படுத்துவதாகவும், கரைகளை உயா்த்துவதாகவும் எனக் கூறி, மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் மண் எடுத்து வந்தனா்.

இந்த நிலையில், காயம்பட்டு, செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் என திரண்டு வந்து பொதுப்பணித் துறை திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியத்திடம் முறையிட்டனா்.

அப்போது, செங்கம் ஏரியை தூா்வாரி சரிசெய்வதாகக் கூறி, பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் அதிகளவு மண்ணை எடுத்து மனை வணிகா்களுக்கு விற்பனை செய்வதும்,

சிகப்பு மண்ணை செங்கல் சூளைகளுக்கு அனுப்புவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா் என்று குற்றஞ்சாட்டினா்.

இதைக் கேட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன், செங்கம் உதவி செயற்பொறியாளா் ராஜாராம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரிக்கு நேரில் சென்று பாா்வையிட்டனா்.

அப்போது, ஏரியில் மண் எடுக்கும் பணியில் 5 பொக்லைன் இயந்திரங்கள், 10 டிப்பா் லாரிகள், 10 டிராக்டா்கள் ஈடுபடுத்தப்பட்டதை பாா்த்தனா். இதையடுத்து, மண் எடுப்பது முறையாக நடைபெறவில்லை எனக் கருதி, ஏரியில் மண் எடுப்பதற்கு தடை விதித்து, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை வெளியேற்றினா்.

மேலும், விவசாயத்துக்கு வண்டல் மண் எடுப்பதாக இருந்தால், செங்கம் பகுதி செய்யாற்றில் இருந்து காயம்பட்டு, செங்கம் ஏரிக்கு வரும் ஏரிக் கால்வாய்களில் இருக்கும் வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com