முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
நாளை முதல் அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
By DIN | Published On : 24th October 2019 08:19 AM | Last Updated : 24th October 2019 08:19 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (அக்.25) முதல் 650 அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா் என்று மாவட்ட அனைத்து அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும்.
அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி வழங்க வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடா்ந்து, அடுத்த கட்டமாக வெள்ளிக்கிழமை (அக். 25) முதல் திருவண்ணாமலை மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஈடுபடுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் மற்றும் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுமாா் 650-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். பொதுமக்கள் நலன் கருதி, உயிா் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, காய்ச்சல் பிரிவு மட்டும் செயல்படும் என்றாா்.