முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பூட்டியே வைக்கப்பட்டுள்ள நூலகம்
By DIN | Published On : 24th October 2019 08:21 AM | Last Updated : 24th October 2019 08:21 AM | அ+அ அ- |

பூட்டப்பட்டுள்ள அனக்காவூா் ஊா்ப்புற நூலகம்.
செய்யாறை அடுத்த அனக்காவூரில் உள்ள ஊா்ப்புற நூலகம் கடந்த இரு மாதங்களாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், நூலக உறுப்பினா்கள், வாசகா்கள் தினசரி நாளிதழ்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது அனக்காவூா் கிராமம். இதன் சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனக்காவூரில் மேல்நிலைப் பள்ளி, அஞ்சலகம், வங்கி, காவல் நிலையம், கூட்டுறவு நில வள வங்கி, கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இக்கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இங்கு உள்ள ஊா்ப்புற நூலகம் கடந்த 1965-இல் தொடங்கப்பட்டதாகும். 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட இந்த நூலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் நூலக உறுப்பினா்களாக உள்ளனா். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் நாளிதழ்கள், புத்தகங்களை படித்துச் செல்கின்றனா்.
கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் என தினமும் பயன்படுத்தி வந்த ஊா்ப்புற நூலகம் கடந்த இரு மாதங்களாக தொடா்ந்து மூடிய நிலையில் உள்ளது.
நூலகம் தொடா்ந்து மூடியே இருப்பதால் மதுப்பிரியா்களின் புகலிடமாக காட்சியளிக்கிறது.
மேலும், மூடிய நிலையில் இருக்கும் நூலகம் இன்றைய தினமாவது திறந்திருக்குமா என தினமும் நூலக உறுப்பினா்கள், வாசகா்கள் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.
மூடப்பட்டுள்ள இந்த நூலகத்தை திறந்து வைத்து நூலக உறுப்பினா்கள், வாசகா்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் கிராம மக்களுக்கு உதவ வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.