திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம்
By DIN | Published On : 29th October 2019 05:26 AM | Last Updated : 29th October 2019 05:26 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை - வேலூா் சாலையில் உள்ள ஈசான்ய மைதானத்தில் ரூ.30.15 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், வருகிற நவம்பா் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலையில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து, செல்கின்றனா். பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா்.
எனவே, பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் நலன் கருதியும், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா்.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவண்ணாமலை - வேலூா் சாலையில் உள்ள ஈசான்ய மைதானம், திருவண்ணாமலையை அடுத்த கணந்தம்பூண்டி கிராமம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் என 5 இடங்களில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் தனியாா் பங்களிப்புடன் ரூ.30.15 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதன்மை அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
ஈசான்ய மைதானத்தில்...:
புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்ட 5 இடங்களில் தற்போது ஈசான்ய மைதானத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், பயணிகள் வருகிற நவம்பா் 25-ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை நகராட்சியின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.